டொரண்ட், ஓர் அறிமுகம் - 1
டொரண்ட் அப்படினு சொல்லப்படுறது என்னன்னா... "இணைய இணைப்பில் இருக்கும் சக கணினிகளுக்கு இடையேயான ஒரு வலையமைப்பை (peer to peer)ஏற்படுத்தி அதன் மூலம் கோப்புகளை பறிமாறிக்கொள்வது".
அடுத்து அந்த வலையமைப்பு எப்படி உருவாக்கப்படுது மற்றும் செயல்படுதுன்னு பார்க்கலாம். உதாரணத்துக்கு நீங்க ஒரு திரைப்படத்த டொரண்ட் மூலமா தரவிறக்கம் செய்றீங்கன்னு வச்சுக்குவோம்.. முதலில் நீங்க செய்ய வேண்டியது ட்ராக்கர் தளங்கள்/டொரண்ட் தளங்களுக்கு போய் தேவைப்படும் திரைப்படம் இருக்கான்னு தேடி கண்டுபிடிக்கனும். பிறகு அதற்கான டொரண்ட் கோப்பை (eg: nayagan_maniratnam.torrent) உங்க கணினிக்குத் தரவிறக்கம் செய்ங்க. டொரண்ட் கோப்புகள் அள்வில் சில kbக்கள் மட்டுமே இருக்கும்.
டொரண்ட் கோப்பில் என்ன இருக்கும்?.. டொரண்ட் கோப்புல ட்ராக்கர்(tracker) மற்றும் நீங்கள் தரவிறக்கம் செய்யப் போகும் கோப்புகளின் விவரங்கள் இருக்கும்.
ட்ராக்கர்னா என்ன? ட்ராக்கர் என்பது சர்வரில் இருக்கும் ஒரு நிரல், உங்களுக்கு படத்தை வழங்கப் போகிற சக கணினிகள் பற்றிய விவரங்கள் அனைத்தும் ட்ராக்கர் தான் பராமரிக்கும். நீங்க தரவிறக்கம் செய்யப் போற படங்கள் யார் யாரு கணினிகள்ல இருக்கு, மேலும் அவங்க கிட்ட முழுசா இருக்கா.. இல்ல படத்தின் சில பகுதிகள் மட்டும் இருக்கா.. உங்களைப் போலவே தரவிறக்கம் செய்ற சக கணினிகள் அப்படின்னு சகலமும் ட்ராக்கர் தெரிஞ்சு வச்சிருக்கும்.
இப்போ உங்க கிட்ட இருக்கிற டொரண்ட் கோப்பை ஏதேனும் ஒரு டொரண்ட் கிளையண்ட் (உ.தா: பிட்டொரண்ட், யுடொரண்ட்,ஏபிசி..) எனப்படும் மென்பொருள் கொண்டு திறக்கவும். திறந்தவுடன் தரவிறக்கம் செய்யப் போகும் கோப்பை உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் எங்கு சேமிக்க வேண்டும் என்று தெரிவிக்க வேண்டும் அவ்வளவு தான் நம் வேலை, வெப்-சர்வரில் உள்ள ட்ராக்கரைத் தொடர்பு கொள்வது, சக கணினிகளின் விவரங்களைப் பெற்று அவற்றை உங்கள் கணினியுடன் இணைத்து, தரவிறக்கம் செய்வது இப்படி மற்ற அனைத்து வேலைகளையும் டொரண்ட் மென்பொருள் பார்த்துக்கொள்ளும்.
இதன் சுவாரஸ்யமே இந்த தரவிறக்கம் எப்படி நடைபெறுகிறது என்பது தான். அதற்கு முன் சில பெயர்கள் பற்றி அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
சீடர்ஸ் (seeders) - நீங்க தரவிறக்கம் செய்யப் போற படத்தை முழுமையா தன் கணினில வச்சிருக்கிறவங்க.
பியர்ஸ் /ஸ்வார்ம்ஸ் (peers/Swarm) - உங்கள மாதிரியே படத்த தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் சக கணினிகள்.
ஒரு கற்பனைக்கு நீங்க ஒரு திரைப்படத்தோட கதைய உங்க நண்பர்கள் கிட்ட கேக்க போறீங்கன்னு வச்சிக்குவோம். ஆனா நிபந்தனை என்னன்னா ஒரே நேரத்துல அத்தனை நண்பர்களுமே கதை சொல்லுவாங்க. சில நண்பர்கள் படம் முழுசா பாத்துருப்பாங்க, சில பேரு கடைசிப்பகுதி மட்டும், சில பேரு நடுவுல மட்டும் கொஞ்சம், இன்னும் சில பேரு உங்கள மாதிரி கதை கேக்கவும் வந்துருப்பாங்க, இப்படி கலவையா ஒரே நேரத்துல உங்களுக்கு கதை சொல்லுவாங்க. ஒருத்தன் சொன்ன காட்சிய இன்னொருத்தன் சொல்ல மாட்டான். ஒரு வசதி என்னனா எத்தனை பேரு கதை சொல்லுறாங்களோ, அத்தனை காது உங்களுக்கு இருக்கும் (கற்பனை..கற்பனை). கதை சொல்லுறதுக்கு ஆள் அதிகமாக,அதிகமாக, உங்களுக்கு காதுகளும் கூடிட்டே போகனும். குறைந்த பட்சம் முழுப்படம் பார்த்தவர் ஒருவராவது இருக்கனும்.. உங்களுக்கு கதையின் பகுதிகள் கிடைக்க,கிடைக்க அதே நேரத்துல.. உங்கள மாதிரியே கதை கேக்க வந்த நண்பர்களுக்கும், உங்களுக்கு தெரிந்த பகுதிகள் பற்றி தெரியாத மற்ற நண்பர்களுக்கு நீங்களும் கதை சொல்ல ஆரம்பிக்கனும். உங்க கிட்ட எத்தனை பேர் கதை கேட்க இருக்கிறார்களோ அத்தனை வாய் உங்களுக்கு இருக்கும்.. (வெ.ஆ மூர்த்தி கதை சொல்ற மாதிரி ஆயிருச்சு..)
இப்படி எல்லாரும் சொன்னது எல்லாம் உங்க மூளைல பதிவானதும், அதுக்கப்புறம் நீங்க தனியா எல்லாத்தையும் சேர்த்துப் பார்த்தா உங்களுக்கு முழுக் கதையும் கிடைக்கும்.
புரிஞ்சிதா??
இதுல முழுக் கதை தெரிஞ்சவங்க எல்லாரும் சீடர்ஸ் (seeders). நீங்களும், உங்கள மாதிரி கதை கேக்குற/சொல்லுற எல்லாரும் பியர்ஸ்/ஸ்வார்ம்ஸ் (peers/swarms).
இதுல எல்லாருக்கும் ஒரு தார்மீகக் கடமை இருக்கு.. என்னன்னா முழுசா கதை கேட்டவங்க எல்லோரும் மத்தவங்களும் கொஞ்ச நேரமாச்சும் கதை சொல்லிட்டு போகனும் (seeding). அப்படி இல்லாம சுயநலமா தனக்கு முழுக்கதையும் தெரிஞ்சவுடனே "சந்தைக்கு போகனும் ஆத்தா வையும்.காசு கொடு"ன்னு ஓடிப் போறவங்கள தான் லீச்சர்ஸ் (leechers) அப்படின்னு சொல்றாங்க.
நம்ம பதிவுலகத்துல பதிவுகள படிச்சிட்டு, சத்தமில்லாம பின்னூட்டம் எதும் போடாமா நைசா ஓடிப் போறவங்களையும் லீச்சர்ஸ்னு சொல்லலாம் :D.
டொரண்டோட சிறப்பு என்னனா.. இப்படி ஒரே நேரத்துல கொடுக்கல்/வாங்கல் இரண்டுமே சகட்டு மேனிக்கு பல பகுதிகளா பிரிச்சி மேயப்படுறதால "மாமலையும் ஒர் கடுகாம்"ன்ற மாதிரி எவ்வளவு பெரிய கோப்பையும் எளிதா தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதே போல் நீங்களும் மற்றவர்களுக்கு கூடுமானவரை தரவிறக்கம் செய்து முடித்த பின்பும், சீட் (seed) செய்து புண்ணியம் பெறலாம்.
வேகம்: இதன் தரவிறக்க வேகம் எப்படி இருக்கும்? எவ்வளவு கூட்டம் (seeders/peers) இருக்கிறதோ அவ்வளவு வேகம் இருக்கும்.
மக்களால அதிகமா தரவிறக்கம் செய்யப்படுற மற்றும் அளவில் மிகப்பெரிதான கோப்புகளுக்கு டொரண்ட் ஓர் அற்புதமான தொழில்நுட்பம். மேலே படத்தில் உள்ள் அமெரிக்காவைச் சேர்ந்த ப்ராம் கொஹன் தான் இதன் படைப்பாளி.
அடுத்த பாகத்தில் ட்ராக்கர் தளங்கள், அவர்கள் எப்படி பயனாளர்களைக் கட்டுப்படுத்துகின்றனர், டொரண்ட் கிளையண்ட் மென்பொருட்களை எப்படி பயன்படுத்துவது, எப்படி டொரண்ட் கோப்புகளை நீங்களே உருவாக்குவது என்பது பற்றி பின்னூட்டங்களின் தன்மைக்கேற்ப விரைவில்... :D
nice torrent
ReplyDelete