Thursday, September 6, 2012

பல மணிநேரம் எப்படி படிப்பது?


ஒரு மாணவர் ஒரு நாளில் 4 மணி நேரங்கள் படிக்கலாம் என்று நினைப்பார். ஆனால் அவரால் தொடர்ச்சியாக 4 மணி நேரம் அமர்ந்து படிக்க முடியுமா? பொதுவாக,பலராலும் இது இயலாத காரியம். ஒரு தட்டில் இருக்கும் சோறு முழுவதையும் நாம் உண்டு முடிக்க வேண்டும் என்ற நிலையில், அந்த சோறு முழுவதையும் நாம் அப்படியே வாயில்கொட்டிக் கொள்வதில்லை. அது முடியாத காரியமும்கூட.

எனவே நாம் சிறிது சிறிதாக எடுத்து உண்கிறோம். முடிவில், முழு சோறும் காலியாகிறது. இதுபோலத்தான் படிப்பும். 4 மணிநேரம் படிக்க வேண்டும் என்று இருக்கையில், நாம் ஒரேடியாக அமர்ந்து தொடர்ந்து படித்தால் நாம் ஒருவழியாகி விடுவோம். மூளை மற்றும் உடல் ஆகிய இரண்டுமே சோர்ந்துவிடும். படித்த விஷயங்களும் நினைவில் பதியாமல் போகலாம். எனவே அந்த 4 மணி நேரத்தை சில அல்லது பல பகுதிகளாக பிரித்து, அதற்கேற்ப உட்கார்ந்து படிக்க வேண்டும்.

அந்த மொத்த நேரமான 4 மணி நேரத்தை குறைந்தபட்சம் 30 நிமிடத்திலிருந்து அதிகபட்சம் 40 நிமிடங்கள் வரை பிரித்துக்கொள்ளலாம். அப்போது உங்களது மூளையும் நன்கு சுறுசுறுப்புடன் ஒத்துழைக்கும். அத்தகைய இடைவெளிகளுக்கு மத்தியில், சில எளிமையான பயிற்சிகள் செய்து, உடலையும், மனதையும் ரிலாக்சாக மாற்றலாம். உங்களின் கைகள், விரல்கள், கழுத்து மற்றும் தோள்பட்டைகள் போன்ற உறுப்புகளுக்கு சில எளிமையான பயிற்சிகளை தரலாம்.

மேலும் சிறிதுநேரம் கண்களை மூடி அமரலாம். சில சமயங்களில் லேசான மூச்சுப் பயிற்சியும் செய்யலாம். இடைவெளி சமயங்களில் நீர் அருந்தலாம். ஏதேனும் ஜூஸ் அல்லது தேநீர் கூட அருந்தலாம். ஒரே பாடத்தை படிக்காமல், பாடங்களை மாற்றி மாற்றி படிக்கலாம். அதேசமயம், இடைவேளையின்போது, டி.வி. பார்த்தல், விளையாடுதல் போன்ற விஷயங்களில் ஈடுபடக் கூடாது.

அத்தகைய நடவடிக்கைகள் படிப்பை பாதித்துவிடும். தேவைப்பட்டால், இடைவெளி நேரங்களில் முகத்தினை கழுவலாம். இதுபோன்ற செயல்முறையில் நீங்கள் ஈடுபடும்போது, உங்களின் மனமும், உடலும் சுறுசுறுப்பாகி 4 மணிநேரம் என்பது, 5 அல்லது 6 மணிநேரமாகவும் அதிகரிக்கலாம்.
  
                                                            Thank You :http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=183&cat=3

No comments:

Post a Comment

comments ...pls